×

தற்காலிகப் பணி விசாக்களை நிறுத்தி வைக்க முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்திடுக : மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!!

சென்னை : இந்தியப் பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்தி வைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய பா.ஜ.க. அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றினால் உலகப் பொருளாதாரமே எதிர்மறையான விளைவுகளை வேகமாகச் சந்தித்து வருகின்ற நேரத்தில், எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்தி வைத்து, அமெரிக்க அதிபர் திரு.டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது, அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. கோவிட்-19 பேரிடரிலிருந்து  பொருளாதார ரீதியாக மீட்சி பெற முயற்சி செய்யும் நம் இந்திய நாட்டின் மீது, திட்டமிட்டு  நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகவே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

அமெரிக்கத் தூதரகத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் எச்-1பி விசாவில் 75 சதவீதம் பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகரித்திட வேண்டும் என்ற நோக்கில்  இந்த முடிவினை எடுத்திருந்தாலும்; அந்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம், தொழில்நுட்பத்திலும், மருத்துவத்திலும் அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கு பெரும்பங்களித்து வரும் இந்தியப் பணியாளர்களுக்கு, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர்ந்திட வேண்டும்.

இந்த நியாயமற்ற முடிவு, அந்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான “உயர் தொழில்நுட்ப அறிவு சார்ந்த” இந்தியப் பணியாளர்களின்  வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும்  மிக மோசமாகப் பாதிப்பதோடு- அவர்களுடைய  வருமானத்தையே  நம்பியிருக்கும்  இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் திடீரென  இன்னல்கள் நிறைந்த இக்கட்டான நிலைமையை  ஏற்படுத்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.ஆகவே, கோவிட்-19 தாக்கத்திற்குள்ளாகியுள்ள இந்த  காலகட்டத்தில்-  பின்னடைவான இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இரு நாடுகளின்  பொருளாதார மற்றும் தூதரக உறவினை மேம்படுத்திடும் வகையில் இந்த விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் முடிவினை திரும்பப் பெற்று- அமெரிக்காவில் உள்ள இந்தியப் பணியாளர்களையும்- நம் நாட்டில் உள்ள அவர்களது குடும்பங்களையும் காப்பாற்றிட மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : government ,US ,Stalin ,Central , Temporary Work, Visas, Review, US Government, Pressure, Federal Government, Stalin, Emphasis
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது